சிறுமியிடம் சில்மிஷம்: பூசாரி கைது
3/17/2020 2:44:13 PM
பவானி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்ைல கொடுத்த கோயில் பூசாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னச்சீரங்கக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (45). இவருக்கு திருமணமாகி மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பெருமாள் கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்று வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயில் பூசாரியாகவும் உள்ளார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து, அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், பாலியல் தொந்தரவு கொடுத்த பெருமாளை, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தார்.