ஊராட்சிகளில் கஜானா காலி: பணியாளர்களுக்கு சம்பளம் கட்
3/17/2020 2:28:18 PM
திருச்சி: தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளும் உள்ளன. கிராமஊராட்சிகளில் ஊராட்சி பொதுநிதி, மின்சாரம் மற்றும் குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளுக்கான வங்கி கணக்குகள் தனித்தனியாக உள்ளன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புதிட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கான கணக்குகள் தற்போது நடைமுறையில் இல்லை. மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான கணக்கு ஊரக வீடுகட்டும் திட்டத்திற்கான கணக்காக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதிக்கு பின்னர் உள்ளாட்சி பிரதநிதிகளின் பதவிக்காலம் முடிந்த பின் தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டபோது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய ஆணையர் கையொப்பம் பெறப்பட்டு கிராம ஊராட்சிகளின் வங்கி கணக்குகள் கையாளப்பட்டது. கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்று கொண்டனர். அதனையடுத்து தற்போது கிராம ஊராட்சிகள் தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளுக்கு வீட்டுவரி, தொழில்வரி, கடைகள் மீது விதிக்கப்படும் வரி, குடிநீர் குழாய் இணைப்பு கட்டணம், நில வரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு, சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு உள்ளிட்டவை மூலம் வருவாய் கிடைக்கிறது. இவைகளால் கிடைக்கும் வருவாயை கொண்டு கிராம ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை நிர்வகிக்க முடியாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்களே கிராம ஊராட்சியின் முதன்மையான வருவாயாகும். கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என கடந்த திமுக ஆட்சியில் கிராம ஊராட்சிகளுக்கு கிராம பொது நிதி அதிக அளவில் வழங்கப்பட்டது. இதன் மூலம் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொண்டது போக ஊராட்சி பொது நிதியில் இருந்த மீதத்தொகையில் சிறுசாலைகள் மற்றும் சிறு பாலங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய ஆட்சியில் 2019-2020ம் நிதி ஆண்டின் தொடக்க மாதமான கடந்த ஏப்ரல் மாதம் முதல் கிராம ஊராட்சிகளின் ஊராட்சிப் பொது நிதிக்கு மொத்த ஊராட்சிகளில் சுமார் இருபது சதவீத ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்படவே இல்லை. மேலும் இருபது சதவீத ஊராட்சிகளுக்கு மாதம் ஒன்றுக்கு இரண்டாயிரத்திற்கு குறைவாகவே பெயரளவிலேயே நிதி வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 60% சதவீத ஊராட்சிகளுக்கும் போதிய நிதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், புதிதாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பேற்றும் கிராம ஊராட்சிகளுக்கு பொதுநிதி வழங்குவதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதன் காரணமாக கிராம ஊராட்சியின் பொது நிதி மூலம் மேற்கொள்ளப்படும் குடிநீர் பராமரிப்பு, டெங்குகொசு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதாரப்பணி பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளது.
மேலும், கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடிய பணியாளர் ஊதிய கணக்கு எண் ஏழு விற்கும் தற்போது உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன் காரணமாக கிராம ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 157, நாகை மாவட்டத்தில் 434, திருவாரூர் மாவட்டத்தில் 430, தஞ்சை மாவட்டத்தில் 589, பெரம்பலூர் மாவட்டத்தில் 121, அரியலூர் மாவட்டத்தில் 210, புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகள், திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் அனைத்தும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.