குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு
1/28/2020 3:17:09 PM
மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டிஎன்பிஎஸ்சி) கடந்தாண்டு நடத்தப்பட்ட குரூப் 4 போட்டித் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன், புரோக்கர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனி மாவட்டம் சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ், புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து முதல் 100 இடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூர் ராஜசேகர், சென்னை ஆவடி காலேஷா, திருவல்லிக்கேணி நிதிஷ்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரை சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் வழக்கம்போல் வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் நீலமேகம் என்பவர் ஆஜராகி, ‘குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வக்கீல் முகமது ரஸ்வி என்பவர் பெயரில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
ஏனெனில், குரூப் 4 மட்டுமின்றி குரூப் 1, 2 மற்றும் போலீஸ் தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் அடிக்கடி நடக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் உண்மையாக படித்து நேர்மையாக தேர்வு எழுதுபவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது. முறைகேடாக தகுதி இல்லாத நபர்கள், முதல் 100 இடங்களுக்கு தேர்வாகும் அபாய நிலை உருவாகிறது. தற்போது குரூப் 4 தேர்வு முறைகேடு சம்பந்தமாக தேர்வர்கள், புரோக்கர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு இவர்களோடு மட்டும் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள், போலீசார், வருவாய்த் துறை உள்ளிட்ட பலருக்கும் பங்கு உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக அரசின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசார் விசாரித்தால், உண்மையாக, நேர்மையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை உருவாக்கவும், அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருப்பதாக தெரிவித்தார்.
‘‘இந்த முறைகேடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று நீதிபதிகள் இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி இன்று ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.