பரங்கிமலை காவல்நிலையத்தில் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த மணல் லாரி: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
12/3/2019 4:39:53 PM
ஆலந்தூர்: பரங்கிமலை காவல் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மணல் கொட்ட வந்த லாரி, அங்குள்ள ஒரு பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் பரங்கிமலை காவல் நிலையம் இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீரை அகற்ற, நேற்று ஒரு டிப்பர் லாரியில் சவுடு மண் ஏற்றி வந்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் சவுடு மண்ணை கொட்டினர். இதையடுத்து மெட்ரோ ரயில்பாதை தூண் அருகே பெரிய பள்ளத்தில் சவுடு மண் கொட்டுவதற்கு டிப்பர் லாரி சென்றது. அப்போது அப்பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த லாரி ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து, ராட்சத கிரேன் மூலம் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரியை மீட்டனர். இதில் டிரைவர் உள்ளிட்ட சில ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.