விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு: புதிய புகைப்படம் வெளியிட்டது நாசா
12/3/2019 2:41:19 PM
சென்னை: விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களை கொண்ட சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் பூமியை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியது. இதையடுத்து சந்திரயான் 2வில் இருந்து ஆர்பிட்டர் கலன் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது நிலவை சுற்றி வந்து மிக துல்லியமான படங்களை அனுப்பியது. இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நொடிக்கு நொடி துல்லியமாக விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நிலவின் தரைப்பகுதியிலிருந்து 2 கி.மீ உயரத்தில் இருந்தபோது, லேண்டருடனான தகவல்தொடர்பு கிடைக்கவில்லை. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தி சிக்னலை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர், ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர்.
செப்டம்பர் 10ம் தேதி விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இதையடுத்து நாசாவின் ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து, லேண்டரை புகைப்படம் எடுக்க முயன்றது. ஆனால் தெளிவான புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் உள்ளதை புகைப்படம் எடுத்துள்ளதாக நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் பச்சை, நீல நிற புள்ளிகளை நாசா குறிப்பிட்டு காட்டியுள்ளது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன், புகைப்படத்தில் லேண்டர் இருப்பதற்கு சாத்தியகூறுகள் உள்ள இடங்களை கண்டறிந்துள்ளார். செட்பம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1ல் நாசா வெளியிட்ட படங்களை ஆய்வு செய்துள்ளார்.
நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததை வைத்து விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு நாசாவுக்கு டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கு விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பொறியாளர் சண்முக சுப்ரமணியனுக்கு நாசா விஞ்ஞானிகள் நன்றி தெரிவித்தனர்.