மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க மகளுக்கு அமைச்சர் பதவி தரேனாரு: மோடி கூறியதாக சரத்பவார் பேட்டி
12/3/2019 2:36:18 PM
மும்பை: பிரதமர் மோடி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தனிப்பட்ட முறையில் எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான நட்புறவு நன்றாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற முடியாது. மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க உதவினால், எனக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்திருந்ததாக வெளியான தகவல் பொய்.
ஆனால், மத்திய அமைச்சரவையில் எனது மகளான சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் முன் வந்தார். அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என்பது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இருந்தும், அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம் பிரதமர் மோடியை, சரத் பவார் டெல்லியில் சந்தித்தபோது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். மாநிலங்களவையின் 250வது சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது கூட, நாடாளுமன்ற மரபுகளை மீறாமல் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் நடந்து வருவதாக புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.