தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை தொடரும்: தமிழகம் முழுவதும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
12/2/2019 3:06:43 PM
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு வங்க கடலில் உருவான புயல்கள் தமிழகத்தில் இருந்து நகர்ந்து வடக்கு நோக்கி சென்று விட்டது. இதனால் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் குறைந்திருந்ததோடு மட்டுமல்லாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடந்த 4 நாட்களாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ச்சியாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. இதே நிலை தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்பட்டது. இந்த மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே மழை மேலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது இன்னும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுதவிர, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மொத்தமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. இதுதவிர புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் வடியவில்லை. தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை தாழ்வான பகுதிகளில் மக்கள் வெளியில் வரமுடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து தேங்கி கிடப்பதால் பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு அதிரடியாக களம் இறங்கி மக்களை பாதுகாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
தொடர் மழை காரணமாக சென்னை பல்கலையில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக நாளை நடை பெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இப்பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் 4 வளாகங்களில் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சென்னையில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த கேங்மேன் பணிக்கான தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
லட்சத்தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, அந்த பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நீர்நிலைகளை கண்காணிக்க உத்தரவு
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அடுத்த 2 நாட்களுக்கு கொசஸ்தலையாறு, அடையாறு, பொன்னையாறு, வெள்ளாறு கோட்ட வடிநில பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் நீர் நிலைகளை 24 மணி நேரமும் காண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் உட்பட தமிழகத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய அணைகளில் 24 மணி நேரம் கண்காணிப்பை பணி தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.