தமிழகம், புதுச்சேரியில் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
11/15/2019 2:46:57 PM
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பிறகு அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் வெப்பசலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது ேலசானது முதல் மிதமானது வரை மழை பெய்கிறது. இந்த மழையானது வரும் 18ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மின்னலுடன் கூடிய மழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை லேசானது முதல் மிதமானது வரை இருக்கும். வெயில் 26-33 டிகரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இரவு 9 மணியில் இருந்து இன்று காலை வரை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. வாகனங்கள் வேகமாக பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. மேலும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, குமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.