16ம் தேதி நடை திறப்பு எதிரொலி: சபரிமலையில் 4 அடுக்கு போலீஸ் குவிப்பு
11/14/2019 2:38:49 PM
திருவனந்தபுரம்: சபரிமலையில் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று ேவறு சிறப்பு பூைஜைகள் எதுவும் நடக்காது. புதிதாக ேதர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகளான சபரிமலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகிய இருவரும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கும். மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல காலம் தொடங்குகிறது. புதிய மேல்சாந்தி பூஜைகளை நடத்துவார். 41 நாள் நடக்கும் பூஜை டிசம்பர் 27ம் தேதி நிறைவடைகிறது. அன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அயோத்தி தீர்ப்பு, மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் இந்த வருடம் சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சபரிமலை முழுவதும் சிறப்பு பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 4 அடுக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முதற்கட்டமாக தென்மண்டல ஏடிஜிபி தலைமையில் 2 ஐஜிக்கள் உள்பட 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். கமாண்டோ வீரர்கள், அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் உள்பட 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் 48 பெண் கமாண்டோக்களும், 700 பெண் போலீசாரும் அடங்குவார்கள். இவர்கள் நாளை சபரிமலைக்கு சென்று 16ம் தேதி முதல் மண்டலகால பூஜை முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதேபோல் பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 4.5 கிலோ மீட்டர் தூரம் முழுமையாக போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும், வனப்பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளது. இலவுங்கல், நிலக்கல், பம்பை, வலியான வட்டம், சன்னிதானம், பாண்டித்தா வளம், புல்மேடு, செறியான வட்டம், உப்புப்பாறை, கோழிக்கானம், சத்திரம் ஆகிய பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக இருக்கும். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் புல்மேடு வழியாகவும் செல்வார்கள். ஆனால் இந்த பகுதியில் வழக்கமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த ஆண்டு புல்மேடு பகுதியும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.