பூரி கட்டையால் சரமாரி அடித்து மனைவியை கொன்ற கணவன் கைது: திருவொற்றியூரில் பயங்கரம்
11/12/2019 3:22:31 PM
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(40). இவரது மனைவி வனிதா (32). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த ஏழுமலை, வீட்டில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து வனிதாவின் தலையில் சரமாரி அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வனிதாவுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். இதன்பிறகு வனிதாவுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 3ம் தேதி வனிதா திடீரென உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு சென்றார். அங்கே உறவினர்கள் கேட்டபோது உடல் நலம் சரியில்லாமல் வனிதா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
ஆனால் வனிதாவின் தந்தை குப்புசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் திருவண்ணாமலை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘எனது மகள் வனிதாவின் சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி அவரது கணவரிடம் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில், திருவண்ணாமலை போலீசார் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார், வனிதா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கட்டையில் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.