கேரளாவில் கொல்லப்பட்டவர் குமரி பெண் மாவோயிஸ்ட்
11/12/2019 2:53:31 PM
நாகர்கோவில்: கேரளாவில் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி, மாவோயிஸ்ட் மாணிக்கவாசகம், ரமா, கார்த்தி, அரவிந்த் ஆகிய 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் நால்வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது போலி என்கவுன்டர் என்று கேரள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இதை மறுத்துள்ள கேரள அரசு, மாவோயிஸ்ட்டுகள் தான் முதலில் தாக்குதல் நடத்தினர். பின்னர் தற்காப்புக்காகவே, தண்டர் போல்ட் வீரர்கள் (மாவோயிஸ்ட் வேட்டைக்காக உருவாக்கப்பட்ட தனிப்படை) சுட்டனர் என கூறி உள்ளது. ெகால்லப்பட்டவர்களிடம் இருந்து ஏ.கே.47, ஏ.கே. 56 ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்றும் கேரள போலீசார் தெரிவித்து இருந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்ட 4 பேரில், பெண் மாவோயிஸ்ட் ரமா, குமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரது முழுப்பெயர் ரமா என்ற அஜிதா. கடந்த 2014ம் ஆண்டு, சட்டக்கல்லூரி படிப்புக்காக மதுரைக்கு சென்றார் அஜிதா. பின்னர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் இவரை பற்றி எந்த வித தகவலும் இல்லை. சட்டப்படிப்பு படித்திருந்த நிலையில் தான், அஜிதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் தான், அஜிதாவின் பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்த சிலர், சமீபத்தில் கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அஜிதா, உங்கள் மகள் தான். அவரது உடலை வாங்கி செல்லுங்கள் என்று கூறி உள்ளனர். இது குறித்து உடனடியாக அஜிதாவின் பெற்றோர், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, அஜிதாவின் பெற்றோரை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த தகவல் குமரி மாவட்ட காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.
மாவோயிஸ்ட் இயக்கத்தில் அஜிதா இருந்தார் என்பதை நம்பும்படியாக இல்லை என அவரது உறவினர்கள் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து சுட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல், அவரது சொந்த ஊரான அழகப்பபுரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த தகவல் வெளியானதில் இருந்து, கியூ பிராஞ்ச் உள்ளிட்ட உளவுப்பிரிவு போலீசார் அஜிதா பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இது குறித்து குமரி மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் ரமா என்ற அஜிதா பற்றிய தகவல், அவரது தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பின் தான் தெரியும். அஜிதாவின் உடலை இங்கு கொண்டு வருவது பற்றி அவரது பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.