பட்டாபிராமில் குடிபோதை தகராறு வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 3 பேர் கைது
11/6/2019 4:38:51 PM
பட்டாபிராம்: பட்டாபிராமில் குடிபோதையில் தகராறில் ஒரு வாலிபரை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுசேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (21). இவர் கிளிக்கூண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டுசேரி மேம்பாலம் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர், முரளியிடம் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அக்கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் முரளி கை, கால், கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் 3 பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது. படுகாயம் அடைந்த முரளியை நண்பர்கள் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முரளியின் தலையில் 10 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், முரளியை கொல்ல முயன்றது பட்டாபிராம், வள்ளலார் நகர் முதல் தெரு சேர்ந்த மகேஷ்குமார் (21), அப்பு (21), அம்பத்தூர், வெங்கடாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரண் (23) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பட்டாபிராம் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.