நாமக்கல் அருகே திருவிழாவில் பேயை விரட்ட சாட்டையடி... அடி வாங்க பெண்கள் குவிந்தனர்
10/9/2019 3:11:37 PM
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த கோயில் திருவிழாவில் பேயை விரட்ட பெண்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டது. நாமக்கல் அருகே சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் நூதன திருவிழா நடந்தது. நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் பவித்திரம் அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள அச்சப்பன்சாமி கோயிலில் நேற்று விஜயதசமி அன்று சாட்டையால் பெண்களை அடித்து, பேய் விரட்டும் நூதன திருவிழா நடந்தது. மாலை 4 மணியளவில் அச்சப்பன்சாமி அலங்கரிக்கப்பட்டு காட்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் நீண்டவரிசையில் தலைவிரிகோலமாக இரண்டு கைகளையும் தூக்கியபடி மண்டியிட்டு தரையில் அமர்ந்திருந்தனர். பூஜை முடித்துக்கொண்டு சாட்டையுடன் அங்கு வந்த பூசாரி, சாட்டையை கொண்டு பெண்களின் கைகளில் சுளீர், சுளீரென அடித்தார். சில பெண்கள் இரண்டு அடி வாங்கியவுடன் எழுந்து ஓடிவிட்டனர். சிலர் 3 முதல் 4 அடி வரை பூசாரியிடம் வாங்கினர். பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால், பேய் பிடித்திருந்தால் ஓடி விடும். திருமண தடை நீங்கி விடும். தீராத நோய்களும் தீர்ந்து விடும், பில்லி சூனியம் விலகி விடும் என்பது நம்பிக்கை, இந்த திருவிழாவுக்கு வரும் பெண்களிடம் இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினார்கள்.