இன்று நியூசிலாந்து அணியுடன் மோதல் பாக். அணியின் அரையிறுதி கனவு பலிக்குமா?
6/26/2019 3:53:39 PM
பர்மிங்காம்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பர்மிங்காமில் இன்று நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ள பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் (இன்று நியூசிலாந்து, 29ம் தேதி ஆப்கானிஸ்தான், 5ம் தேதி வங்கதேசம்) கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேற வேண்டியதுதான். இன்றைய போட்டியில் ஒருவேளை பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால், அடுத்து வரும் பலவீனமான அணிகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை எளிதாக வீழ்த்த பாகிஸ்தான் வியூகங்களை வகுக்கும். அதனால், இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் தோல்வியின்றி பயணத்தை தொடருகிறது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்தின் அரைஇறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்த இரண்டு அணிகளும் கடைசியாக சந்தித்த 14 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), வஹாப் ரியாஸ், ஷதப் கான், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி. நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் கிரான்ட்ஹோம், சான்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.