திருட்டு காரில் துப்பாக்கியுடன் வந்த ஆசாமிகளை துரத்திய போலீசார்: விருதுநகரில் அதிகாலை பரபரப்பு
6/18/2019 3:49:32 PM
விருதுநகர்: கேரளாவில் காரை திருடி நெல்லை மாவட்டம் வழியாக துப்பாக்கியுடன் வந்த 3 பேரை, விருதுநகரில் நெடுஞ்சாலைத் துறை போலீசார் இன்று அதிகாலை துரத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நெருங்கியதும் காரை நிறுத்தி விட்டு, 3 பேரும் குதித்து தப்பியோடி விட்டனர். கார் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், தப்பிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.கேரள மாநிலத்தில் சொகுசு கார் ஒன்றை திருடிய 3 பேர் கொண்ட கும்பல், ஏர் பிஸ்டல் வகையை சேர்ந்த கைத்துப்பாக்கியுடன் தமிழகத்திற்கு நேற்று நள்ளிரவில் வந்துள்ளனர். காரின் பதிவெண்ணை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு, அங்கு ரூ.3,500 விலையில் காருக்கு ஸ்டெப்னி டயர் மற்றும் டியூப் வாங்கியுள்ளனர்.
அதற்கு பணம் கொடுக்காமல் திடீரென காரில் ஏறி, அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர், டூவீலரில் காரை துரத்தி வந்தனர். கார் அதிக வேகமாக சென்றதால், கோவில்பட்டியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார், விருதுநகர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விருதுநகர் அருகே பட்டம்புதூரில் இன்று அதிகாலை 3 மணியளவில் சாலையின் குறுக்கே பேரி கார்டுகளை போட்டு, போலீசார் அந்த காரை மறித்துள்ளனர். ஆனால் பேரி கார்டுகளை இடித்து தள்ளி விட்டு காரில் அந்த கும்பல் பறந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசார் காரை, விடாமல் துரத்தி சென்றனர். அதிகாலையில் நடந்த துரத்தலை கண்டு எதிரே வாகனங்களில் வந்தவர்கள் மிரண்டு ஒதுங்கியுள்ளனர். மேம்பாலம் அருகே வந்ததும் பாலத்தில் ஏறாமல் சர்வீஸ் ரோட்டில் சென்ற காரை போலீசார் விடாமல் துரத்தியுள்ளனர். நடுவே ரயில் பாதை உள்ளதை பார்த்த டிரைவர் உள்ளிட்ட 3 பேரும், அதற்கு மேல் செல்ல முடியாமல் காரை நிறுத்தி விட்டு, குதித்து தப்பியோடி இருளில் மறைந்து விட்டனர்.காரை கைப்பற்றிய போலீசார் அதில் ஏர் பிஸ்டல் வகையை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கார் மற்றும் கைத்துப்பாக்கியை சூலக்கரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
தப்பியோடியவர்கள் யார், அவர்கள் யாரை கொலை செய்ய காரில் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.