போதை மருந்து, மதுபானம், கள்ளநோட்டு, பணப்புழக்கத்தை கண்காணிக்க 15 புலனாய்வு குழுக்கள் ஒருங்கிணைப்பு
3/14/2019 3:40:28 PM
* பணப்பட்டுவாடா தடுக்க தமிழகத்திற்கு கூடுதல் பார்வையாளர்கள்
* இன்றும், நாளையும் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
புதுடெல்லி: நாடு முழுவதும் போதை மருந்து கடத்தல், மதுபானம், கள்ளநோட்டு, பணப் புழக்கத்தை கண்காணிக்க 15 நிதி புலனாய்வு குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்திற்கு 2 கூடுதல் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் விதமாக, கடந்த சில நாட்களுக்கு முன் உயர்மட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழுவை தேர்தல் ஆணையம் அமைத்தது. தேர்தல் புலனாய்வு பல்துறை குழு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில், மத்திய நேரடி, மறைமுக வரிகள் ஆணைய உயரதிகாரிகள், அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, பொருளாதார புலனாய்வு துறை, நிதித்துறை புலனாய்வு துறை உயரதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ரஜினிகாந்த் மிஸ்ரா, மத்திய ரிசர்வ் படை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பட்நாகர், தொழில்பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் ரஞ்சன், சாஸ்த்ர சீமா பால் இயக்குநர் ஜெனரல் தேஸ்வால், போதைப்பொருள் தடுப்பு போலீஸ் இயக்குநர் ஜெனரல் அபய் குமார்.
ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண் குமார், விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், அனைத்து உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகள் மூலமாக அதிக பணம் டெபாசிட் செய்வதை கண்காணிக்க வங்கி மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவும் இடம்பெற்றுள்ளது. இந்த குழு, தேர்தல் காலத்தில் எங்கெல்லாம் பண புழக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும். குறிப்பாக கடத்தி வரப்படும் சட்டவிரோத பொருட்கள், போதை பொருட்கள், மதுபானங்கள், பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். மேலும், வங்கிகளில் தொடங்கி பணம் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இந்த குழுவின் கண்காணிப்பு இருக்கும். இந்த குழுவில் வங்கி மூத்த அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். கடந்த 3 மாத காலத்தில் வங்கிகளில் மிகப்பெரிய பண முதலீடுகள், பணம் எடுத்தல் ஆகியவை குறித்து இந்த அதிகாரிகள் தகவல்களை பரிமாறுவார்கள்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவு பணம் புழங்குவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இன்று மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து நாளை நிதி புலனாய்வு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் நேரங்களில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்தல், நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றுக்காக, 15 நிதி புலனாய்வு ஏஜென்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், நாட்டின் 543 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதி எல்லை, மாவட்ட எல்லை, மாநில எல்லை, நாட்டின் எல்லைப் பகுதியில் முகாமிட்டு சட்டவிரோத பொருட்கள் கடத்தல், போதை பொருட்கள், மதுபானங்கள், பணம், கள்ளநோட்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் என்பதால், தமிழகத்திற்கு மட்டும் கூடுதலாக 2 மத்திய பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவை பொறுத்தமட்டில் அங்கு மக்களவை தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலும் நடப்பதால், அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி, 15 ஏஜென்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்கள் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் ெசயல்படுவார்கள்.
2014ல் ரூ1,200 கோடி பறிமுதல்
தேர்தல் காலங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், விதிமுறை மீறி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 1,200 கோடி ரூபாய் சட்டவிரோத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆந்திராவில் மட்டும் 124 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதே கடந்த 2009ல் நடந்த தேர்தலின் போது 100 கோடி ரூபாய் மட்டுமே பறிமுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.