ஓய்வு எஸ்.ஐ. கொலை: கள்ளக்காதலி கைது: மதுராந்தகத்தை சேர்ந்தவர்
2/12/2019 3:10:34 PM
மதுரை: விருதுநகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் தங்கராஜ்(55). எஸ்.ஐ.யாக பணிபுரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 3ம் தேதி இரவு மதுரை அழகர்கோயிலில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவருடன் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனது 13 வயது மகளுடன் வந்து தங்கினார். மறுநாள் (4ம் தேதி) இரவு அறையில் தங்கராஜ் மர்ம உறுப்பு, 2 காதுகள் அறுக்கப்பட்டிருந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அறையில் தங்கியிருந்த பெண், அவரது மகள் மாயமாகி இருந்தனர். மேலும் தங்கராஜ் அணிந்திருந்த 7 பவுன் செயினையும் காணவில்லை. இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தங்கராஜை கொன்றது சென்னை அருகே மதுராந்தகத்தில் வசித்து வரும் நாகேஸ்வரி, அவரது கணவர், தம்பி என்பது தெரிந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை அருகே முக்கூடல் பகுதியில் தங்கியிருந்த நாகேஸ்வரி(35), அவரது கணவர் குமார்(40), தம்பி வசந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நாகேஸ்வரியின் தாயார், தங்கராஜ் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது தாயாரின் வீட்டுக்கு வந்து சென்ற நாகேஸ்வரிக்கும், தங்கராஜூக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே கொடுக்கல் - வாங்கல் இருந்துள்ளது. இந்த பழக்கத்தில் நாகேஸ்வரி தனது 13 வயது மகளுடன் அழகர்கோயிலுக்கு தங்கராஜூவுடன் சென்று தங்கினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நாகேஸ்வரியின் மகளை தங்கராஜ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நாகேஸ்வரி, கணவர், தம்பியை வரவழைத்து தங்கராஜின் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது’’ என்றனர். நாகேஸ்வரியின் மகளை தங்கராஜ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகேஸ்வரி, கணவர், தம்பியை வரவழைத்து தங்கராஜின் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.