ஆவடியில் கடைக்குள் தீ: 40 டிவிகள் எரிந்து நாசம்
2/11/2019 3:43:07 PM
ஆவடி: ஆவடியில் ஒரு டிவி மெக்கானிக் கடை திடீரென தீப்பிடித்ததில் 40 டிவிகள் எரிந்து நாசமானது. ஆவடி, வசந்தம் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் சம்பத் (58). இவரது மனைவி தேன்மொழி (50). இவர் தனது வீட்டு வளாகத்தின் ஒரு பகுதியில் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட டிவிகள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பழுது பார்ப்பதற்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சம்பத் வெளியே சென்றுவிட்டார். அப்போது அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு மனைவி தேன்மொழி அதிர்ச்சியானார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் கடையை திறந்தபோது, கடைக்குள் இருந்த டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரைமணி நேரம் போராடி, கடைக்குள் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்விபத்தில் சுமார் 40 டிவி உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ₹5 லட்சம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இப்புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக கடைக்குள் தீப்பற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.