பைக்கில் 3 பேர் சென்றதை தட்டி கேட்டதால் ஆத்திரம் காவலரை ஓட ஓட அடித்து உதைத்த போதை வாலிபர்கள்: ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் புகார்
2/11/2019 3:38:04 PM
சென்னை: பைக்கில் 3 பேர் சென்றதை தட்டிக்கேட்ட காவலரை, போதையில் இருந்த வாலிபர்கள் ஓட ஓட சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் சேத்துப்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகரம் முழுவதும் இரவு நேரங்களில் அந்தந்த பகுதியிள்ள காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தலைமை காவலர்கள் கருணாகரன்(38) மற்றும் காவலர் முருகன்(25) ஆகியோர் ேநற்று இரவு தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட நமச்சிவாயபுரம் மேம்பாலம் அருகே வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் 3 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் வந்தனர். இதை பார்த்த காவலர் முருகன் பைக்கை நிறுத்த முயன்றார். ஆனால் போதையில் இருந்த வாலிபர்கள் பைக்கை நிறுத்தாமல் காவலரை கேலி செய்தபடி சென்றனர். உடனே ஆத்திரமடைந்த காவலர் முருகன் தான் வைத்திருந்த லத்தியால் ஓங்கி அடித்தார். இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற அஜய்குமார் என்ற வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து 3 வாலிபர்களும் லத்தியால் அடித்த காவலர் முருகனிடம் வந்து “ஏன் அடித்தீர்கள் என்று” தகராறில் ஈடுபட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கருணாகரனை மற்றும் முருகனை ஓட ஓட சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் முருகன் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சூளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதை பார்த்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சூளை போலீசார் உதவியுடன் காயமடைந்த காவலர் முருகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல், காவலர் லத்தியால் தாக்கியதில் காயமடைந்த அஜய்குமார் என்பவரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் இரண்டு புகார்களையும் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களையும் போலீசார் தேடிவருகின்றனர். ரோந்து பணியின் போது காவலரை போதை ஆசாமிகள் ஓட ஓட அடித்து உதைத்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.