காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்சை தாக்கிய சென்னை போலீஸ்காரர்: கண்ணாடிகளை உடைத்து கடும் ரகளை
2/9/2019 4:40:23 PM
திருச்சி: காதலிக்க மறுத்ததால் நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்சை சரமாரியாக தாக்கிய சென்னை போலீஸ்காரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கோட்டாத்தூரை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் சென்னை ஆவடி பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சை காதலித்துள்ளார். தற்போது, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் காதலி, நவீன்குமாருடன் பேசுவதை தவிர்த்தார். பலமுறை போனில் தொடர்பு கொண்டும் காதலி போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது காதல் விவகாரம் குறித்தும், கடந்த சில நாட்களாக காதலி பேச மறுப்பது குறித்து நண்பர் முரளிதரனிடம் தெரிவித்து உள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து மதுஅருந்தி விட்டு காதலி எங்கே இருக்கிறார் என விசாரித்து உள்ளனர். காதலி மருத்துவமனையில் இரவு பணியில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீஸ்காரர் நவீன்குமார் மற்றும் முரளிதரன் இருவரும் போதையில் அந்த மருத்துவமனைக்கு நள்ளிரவு சென்றனர். மருத்துவமனையின் வெளியில் நின்று நவீன்குமார் காதலிக்கு போன் செய்து, ‘‘என்கிட்ட நீ ஏன் பேச மாட்டேங்குற.. அதுக்கு காரணத்த சொல்லு.. அப்படி இல்லனா நீ இப்போ வெளியே வரணும்..’’ என அழைத்து உள்ளார். அதற்கு அவர் வெளியே வர முடியாது என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த நவீன்குமார், மருத்துவமனையின் கேட் முன் நின்று கொண்டு கூச்சல் போட்டு ரகளை செய்தார். அப்போது, வெளியே வந்த காதலி, நவீன்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார், காதலியை சரமாரியாக தாக்கினார்.
அடிதாங்க முடியாமல் மருத்துவமனைக்குள் ஓடிய காதலி கதவை தாழ்போட்டுக்கொண்டார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற போலீஸ்காரர் நவீன்குமாரும், நண்பர் முரளிதரனும் சேர்ந்து மருத்துவமனையின் கண்ணாடி கதவை உடைத்து நொறுக்கி உள்ளே புகுந்து மீண்டும் நர்சை தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த டாக்டரையும் நவீன்குமார் தாக்க முயன்றார்.உடனடியாக துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து நவீன்குமாரையும், முரளிதரனையும் பிடித்து விசாரித்தனர். கண்ணாடி ஜன்னலை உடைத்ததில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து போலீஸ்காரர் நவீன்குமார் மற்றும் முரளிதரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.