மழை பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு: கலெக்டர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு
12/5/2018 2:39:41 PM
சென்னை: மழையால் பாதிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும். விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கல்வித்துறைச் செயலாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் மழை, திருவிழா போன்றவைகளுக்காக மாவட்ட கலெக்டரே விடுமுறை அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை வரும் என்ற காரணங்களுக்காக பல மாவட்டங்களில் சமீப காலமாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவ்வாறு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் மழை வராமல் வெயில் அடித்ததால், பள்ளி விடுமுறை வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் மாணவர்களின் படிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
இதனால் விடுமுறை விடுவதில் புதிய 7 கட்டுப்பாடுகளை விதித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
1. வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் பட்டால் மட்டுமே மழை விடுமுறை விட வேண்டும். தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை விடக்கூடாது.
2. பள்ளியை திறப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா என்று முடிவு எடுக்க வேண்டும்.
3. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றியும் எந்த பகுதியில் விடுமுறை விடுவது என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.
4. மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும். ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை விட வேண்டிய அவசியமில்லை. கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சி பகுதி அளவுக்குக் கூட விடலாம்.
5. கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
6. விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும். பாடத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. எவ்வளவு விரைவாக பள்ளியை திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாக திறக்க வேண்டும். பள்ளிகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதனை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து பள்ளியை திறக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இனி மழை பெய்தால் மட்டுமே விடுமுறை விடப்படும். பெய்யும் என்று முன் அறிவிப்புக்காக விடுமுறை விடப்படாது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.