ஆசிய பாரா விளையாட்டு போட்டி வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்
10/11/2018 2:58:34 PM
ஜகார்தா: இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நேற்று வில்வித்தை, தடகளத்தில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் ஜாவ் லிக்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தடகள போட்டிகள் பிரிவில், 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் நாராயண் 14.02 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். சவுதி அரேபிய வீரருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் மோனு வெள்ளிப்பதக்கமும், குண்டு எறிதலில் முகமது யாசர் வெண்கலமும், நீளம் தாண்டுதலில் விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மகளிருக்கான செஸ் போட்டியில் இருதயராஜ் ஜெனிதா வெள்ளிப்பதக்கமும், ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் சுதிர் வெண்கலமும் வென்றனர். பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று மட்டும் இந்திய வீரர்கள் 9 பதக்கங்கள் பெற்று அசத்தினர். மொத்தம் 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. சீனா 189 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.