ஜம்மு - காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல்: இன்டர்நெட், மொபைல் சேவை துண்டிப்பு
10/10/2018 3:35:40 PM
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடப்பதால், வடக்கு காஷ்மீர் பகுதியில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த, 8ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில், காஷ்மீர் பகுதியில் 18.5 சதவீத வாக்குப்பதிவும், ஜம்மு பகுதியில் 65 சதவீத வாக்குப்பதிவும் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெற உள்ள அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 384 வார்டுகளில், 7 வார்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளன. மொத்தம் 1,095 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அவர்களுள் 65 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 56 தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அங்கு தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 35ஏ தொடர்பாக, முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை இத்தேர்தலை புறக்கணித்துள்ளன. காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே களத்தில் உள்ளன. தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க, அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், வடக்கு காஷ்மீர் பகுதியில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.