இரும்பு ஆலையில் காஸ் குழாய் வெடிப்பு: 12 தொழிலாளர்கள் பலி....சட்டீஸ்கர் மாநிலத்தில் சோகம்
10/10/2018 3:29:34 PM
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில இரும்பு ஆலையில் ஏற்பட்ட காஸ் குழாய் வெடிப்பு சம்பவத்தில், 12 தொழிலாளர்கள் பலியாகினர். சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் மாநில அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை இயங்கி வருகிறது.இந்திய ரயில்வே துறைக்கு உலகத்தரம் வாய்ந்த ரயில் தண்டவாளங்களை தயாரித்து சப்ளை செய்கிறது. இந்நிலையில், பிலாய் இரும்பு ஆலையில் நேற்று வழக்கமான உற்பத்தி பணிகள் நடந்துகொண்டிருந்த போது, காலை 11 மணி அளவில் ஆலையில் உள்ள காஸ் குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், ஆலைக்குள் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர். இருந்தும், தீயில் சிக்கி 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 14 பேர் பலத்த தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து, மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.