புரோ கபடி லீக் போட்டி உ.பி. அணியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்
10/9/2018 3:38:20 PM
சென்னை, புரோ கபடி லீக் ஆட்டத்தில், 32-37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி., அணியிடம் தோல்வியை தழுவியது. புரோ கபடி லீக் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழ் தலைவாஸ், அரியானா, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், உ.பியின் யோதா அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே உ.பி. அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 0-12 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்தனர். 13வது நிமிடத்தில் முதல் புள்ளியை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் சொதப்பினர். முதல் பாதியில் 4-18 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தது தமிழ் தலைவாஸ் அணி.
2வது பாதியிலும் உ.பி. அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலையில், கேப்டன் அஜய் தாகூர் சிறப்பாக விளையாடிய நிலையில், 19-27 என்ற நிலைக்கு தமிழ் தலைவாஸ் வந்தது. 5 நிமிடத்தில் 11 புள்ளிகளை எடுத்து உ.பி. அணியை நெருங்கியது. ஆனாலும், 32-37 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி, 5 புள்ளிகள் வித்தியாசத்தில் உ.பி., அணி வெற்றிபெற்றது. ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் சொதப்பிய போதிலும், இறுதிக் கட்டத்தில் உ.பி., அணிக்கு சவாலாக விளங்கியது. இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.