செங்குன்றம் அருகே மகளிர் குழு தலைவிக்கு கொலை மிரட்டல்
9/20/2018 5:05:21 PM
புழல்: செங்குன்றம் அடுத்த மொண்டிமாநகர், முனிஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவரது மனைவி ரமணி (47). இவர், அப்பகுதியில் மகளிர் குழு தலைவியாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் மகளிர் குழு சார்பில் நாப்கின் பொருட்களை தயாரிக்கும் மற்ற பெண்களுடன் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த ரமணி, திடீரென பேனில் புடவையால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை ரமணி வீடு திரும்பினார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசில் நேற்றிரவு ரமணியின் கணவர் ராமச்சந்திரன் அளித்த புகாரில், இதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஒன்றிய அதிமுக
கவுன்சிலரான ராஜேந்திரன்,
முக்கிய புள்ளி நடராஜன், ராதிகா, சங்கீதா, யுவனேஸ்வரி ஆகிய 5 பேரும் ‘நீங்கள் இனிமேல் உங்களது மகளிர் சுயஉதவி குழு மூலமாக, பாடிநல்லூரில் உள்ள குப்பை தரம் பிரித்தல் மற்றும் நாப்கின் தயாரிப்பு உள்ளிட்ட அரசு வேலைகளை செய்யக்கூடாது’ என கூறி ரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என குறிப்பிட்டு உள்ளார்.இப்புகாரை பார்த்த போலீசார் ‘இது எங்கள் எல்லைக்குள் வராது. நீங்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்’ என செங்குன்றம் போலீசாரும், ‘அங்கே செல்லுங்கள்’ என சோழவரம் போலீசாரும் நள்ளிரவு வரை அலைக்கழித்துள்ளனர். பின்னர் ஒருவழியாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரை பெற்றுக் கொண்டு, இந்த இடம் செங்குன்றமா, சோழவரமா என கிராம விஏஓவிடம் இன்று காலை நான் கலந்து பேசி தீர்மானித்த பிறகு, இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என கூறி, ரமணி கணவரை அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அப்பகுதி மகளிர் குழு பெண்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.