வங்கக் கடலில் காற்றழுத்தம் வலுப்பெறும் நிலையில் அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
7/12/2018 4:24:38 PM
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தம் வலுப்பெற்று வரும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த சென்னை மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், 3வது நாளாக நேற்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர் முகப்பேர், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ெமரினா, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதேபோல், பல்லாவாரம், ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், புழல், கதிர்வேடு, ேசாழவரம், மீஞ்சூர், பொன்னேரி, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இதேபோல், 4வது நாளாக இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் லேசான சாரல் மழை காணப்பட்டது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு வரை பல்வேறு இடங்களில் மழை பெய்திருந்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால், காலை நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், வங்கக் கடலின் வடமேற்கு பகுதியில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, ஆந்திரா அருகே மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தம், அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. ஆந்திரா அருகே ஏற்படும் காற்றழுத்தம் என்பதால், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.
அடுத்து வரும் 2 நாட்களுக்கு இதேபோல் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: ‘‘கேரளா மற்றும் கர்நாடகாவில் பருவமழை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்கிறது. வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் பிற இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 தினங்களுக்கு இந்த மழை நீடிக்கும். நேற்று நிலவரப்படி பருவமழை இயல்பை விட 27 சதவீதம் அதிகம் பெய்துள்ளது’’ என்றார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தென்மேற்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று கடல் பகுதியில் வீசி வருகிறது. கடல் மலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்க கடலில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் வடதமிழக கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும். எனவே, வட மற்றும் தென் தமிழக மீனவர்கள் இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.