போலீஸ் ஸ்டேஷனில் விருந்து சாப்பிடும் முதல்வர்: போலி புகைப்படம் வெளியிட்ட 3 பேர் கைது
7/11/2018 4:12:32 PM
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த ஜூன் 30ம் தேதி புதியதாக போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை திறந்து வைத்தார். அப்போது, ஸ்டேஷனின் பொதுநாட்குறிப்பு நோட்டில், அவர் வந்து சென்றது தொடர்பான தகவலை இருக்கையில் அமர்ந்தபடி பதிவிட்டார். அப்போது அவர் அருகில், டிஜிபி லோக்நாத் பிஹீரா உள்ளிட்டோர் இருந்தனர். இதுதொடர்பான புகைப்படம் போலீசார் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் பினராயி விஜயன் வாழை இலை போட்டு சாப்பிடுவது போலவும், அவர் அருகில் போலீஸ் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது போலவும் புகைப்படத்தை சிலர் மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில், முதல்வர் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதை ஒத்துக் கொண்டனர். அதையடுத்து, மட்டனூரைச் சேர்ந்த முகம்மது, மனீஷ், அச்சரகண்டியைச் சேர்ந்த சஞ்சித் குமார் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷன் கூறியதாவது: முதல்வர் போலீஸ் ஸ்டேஷனில் வாழை இலையில் விருந்து சாப்பிடுவது போல் புகைப்படத்தை மார்பிங் செய்து, வாட்ஸ் அப்பில் உலவவிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கடந்த மாதம், வெளிநாட்டில் வசிக்கும் கேரள வாலிபர் ஒருவர், பினராயி விஜயன் இறந்துவிட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவர், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதேபோல், அபுதாபியில் உள்ள கோதமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாயர் என்பவர், அபுதாபியில் இருந்து டில்லி வந்த போது கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.