சூரிய மகத்துவம்
4/25/2018 4:01:10 PM
மண்டையைப் பிளக்கிறது, வெயில். தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல். திருச்சியில் 105. தார் உருகி ஓடும் அளவு, சாலைகளில் சூடு. நண்பகலில் வாகனங்களில் செல்வதென்றால் மலைப்பு. சிறிது நேரம் நடந்து சென்றாலே மயங்கிச் சுருள்வோமோ என்ற அச்சம்.
ஆனாலும், வெயில் ஓர் அரிய கொடை. அதன் அத்தனை ஆற்றலையும் கொள்ள, கொள்கலன் இல்லை. சூரியன் முகம் காட்டாத காலங்கள், மேற்கத்திய நாடுகளில் உண்டு. சூரியனைப் பார்க்க ஏங்கித்தவிப்பார்கள் அங்குள்ள மக்கள். இங்கோ சுட்டெரிப்பதால், தலைமறைவாகிறோம்.
சென்னையில் கட்டிட மாடிகளில் சோலார் பேனல்கள்(சூரிய ஒளித்தகடுகள்) பொருத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் திட்டம் குறித்து ஓர் அமைப்பு ஆய்வு மேற்ெகாண்டது.
‘சென்னையின் மொத்த மின் தேவை 1380 மெகாவாட். கட்டிட மேற்கூரையில் சோலார் பேனல்களைப் பொருத்தி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தில் கவனம் செலுத்தினால், இந்த மின் தேவையை எளிதாகச் சமாளிக்கலாம். சென்னையில் ரயில் நிலையப்பகுதிகளில் 3,582 கிலோவாட், மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளில் 1696 கிலோவாட், பஸ் நிலையப் பகுதிகளில் 938 கிலோவாட், விமான நிலையப் பகுதிகளில் 889 கிலோவாட் சூரிய மின்சாரத்தைச் சுலபமாகத் தயாரிக்கலாம். சென்னையில் காற்று மாசு இப்ேபாது குறைந்துவிட்டதால், சூரிய மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3.15 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.
சென்னையின் குடியிருப்புப் பகுதிகளிலும், மேற்கூரைச் சூரிய மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்த நல்ல வாய்ப்பு உள்ளது. சென்னை மக்கள், சோலார் பேனல்களைப் பயன்படுத்தினால், மின்கட்டணமும் கணிசமாகக் குறையும்’ என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சூரிய மின் சக்தித் திட்டங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஊட்ட வேண்டும். அதேசமயம், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு தரும் மானியம் உள்ளிட்டவை குறித்து வெளிப்படைத்தன்மை தேவை.
இத்திட்டங்களுக்கான செலவுகள் தற்போது உள்ளதைக் காட்டிலும் குறைவானதாக இருந்தால், இத்திட்டம் எளிதாகச் செயல்பாட்டுக்கு வரும். சில அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தித் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு என்பதே இல்லாமல், சூரிய மின்சக்தியே வீட்டுக்கு வீடு கிடைத்தால் நன்று.
பொங்கல் நேரத்தில்
போற்றுகின்ற வாயெல்லாம்
புழுங்கல் நேரத்தில் தூற்றுகின்றன
ஆயிரம் கைகள் மறைத்தும்
நீ மறைவதில்லை
ஆயிரம் ஆண்டு மறைந்தும்
அது மனிதனுக்குப் புரிவதில்லை
உன்னை நம்பி
எங்கள் பயிர் மட்டும் அல்ல
எங்கள் உயிரும்தான்...
சூரியனின் மகத்துவம் புரிந்தால் மகோன்னதம் அல்லவா!