விஏஓவிடம் 65 லட்சம் மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
4/17/2018 3:43:37 PM
திருச்சி: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராஜு. விஏஓவான இவருக்கும், சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி வந்த ராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தி காரில் வலம் வந்ததோடு, ராஜுவிடம் ரூ.65 லட்சம் வரை வாங்கியுள்ளார். பின்னர் தான் அவர் ஐஏஎஸ் அதிகாரியே இல்லை என்றும், தன்னிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜு கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் கடந்த ஜூலை மாதம் ராம் மீது வழக்கு பதிந்தனர். இந்த தகவல் தெரிய வந்ததும், வாங்கிய பணத்தை திரும்பி தருவதாக கூறி ராஜுவை திருச்சி கே.கே.நகரில் உள்ள
வீட்டிற்கு வர வழைத்த ராம், அவரது உறவினர்களுடன் சேர்ந்து ராஜுவை வீட்டிற்குள் வைத்து சரமாரி தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜு மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் கே.கே.நகர் போலீசார் ஸ்ரீராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி என கூறி ரூ.65லட்சம் மோசடி செய்திருப்பது தொடர்பாக சிதம்பரம் போலீசில் வழக்கு இருப்பதால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க திருச்சி வந்து ராமை அழைத்து செல்ல சிதம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.