மத்திய பிரதேசத்தில் ரூ.2000 நோட்டுக்கு தட்டுப்பாடு: பாஜ முதல்வர் சவுகான் எச்சரிக்கை
4/17/2018 3:16:42 PM
போபால்: நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகள் மாயமாகி வருகின்றன. இதில் ஏதோ சதி நடக்கிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் எச்சரித்துள்ளார். நாட்டில் கறுப்புப் பணம் , கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த நோட்டுக்குப் பதிலாக மத்திய அரசு புதிய வடிவிலான ரூ.2000, ரூ.500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் உருவான பணத் தட்டுப்பாடு 6 மாதங்களுக்குப் பின்பே மெல்ல மெல்லச் சரியானது. ஆனால், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெரும் பணத் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வந்தன.
ஏடிஎம்கள் எல்லாம் பணமில்லாமலும், பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் பண மதிப்பிழப்பின் நின்றதுபோல் நிற்பதையும் காணமுடிந்தது. இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் கண்டித்திருந்தார். இந்நிலையில், இப்போது இதே பணத் தட்டுப்பாடு மத்தியப் பிரதேச மாநிலத்திலும் உருவாகியுள்ளது.
அந்த மாநில முதல்வரும் இது குறித்துவெளிப்படையாகப் புகார் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் விவசாயிகள் மாநாடு இன்று நடந்தது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவருவதற்கு முன், மொத்தம் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து முடிந்தபின், ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. ஆனால், மத்திய அரசு புழக்கத்தில் விட்ட 2000 நோட்டுகளைச் சமீபகாலமாக பார்க்க முடியவில்லை.
சந்தையில் இருந்தே மறைந்துவிட்டது.. நம் மாநிலத்தில் பல்வேறு ஏடிஎம் மையங்கள் பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன, புழக்கத்துக்கு பணம் இல்லாமல் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏதோ சதி நடக்கிறது என சந்தேக்கிறேன். சந்தையில் இருந்து காணாமல் போன 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே சென்றன. இந்தப் பணத்தை எல்லாம் யார் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு பணத் தட்டுப்பாடு நிலவ யார் காரணம். இதுபோன்று சதி செய்து யாரோ பிரச்சினைகளை கிளப்பப் பார்க்கிறார்கள். பணத் தட்டுப்பாடு நீங்க முயற்சி எடுப்பேன். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.