சசிகலா புஷ்பா கணவர் ராமசாமியின் 2வது மனைவியை கைது செய்ய டெல்லி போலீசார் முகாம்
4/16/2018 4:03:43 PM
மதுரை: அதிமுக எம்பி சசிகலா புஷ்பா (41). தனது கணவர் லிங்கேஷ்வர திலகனை சமீபத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் டெல்லியில் தற்போது வசித்து வரும் வக்கீல் ராமசாமியை (47) கடந்த மாதம் 26ம் தேதி மறுமணம் செய்தார். ராமசாமி ஏற்கனவே கடந்த 2014ல் மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பட்டதாரியான சத்யபிரியாவை (34) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரிதுசனா (1) என்ற பெண் குழந்தையும் உள்ளது. ராமசாமியின் மறுமணத்துக்கு தடை விதிக்கக் கோரி சத்யபிரியா மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். நீதிமன்றமும் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணத்திற்கு தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி டெல்லியில் ராமசாமி, சசிகலா புஷ்பாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ராமசாமி, டெல்லி நார்த் அவின்யூ போலீசில் சத்யபிரியா மற்றும் அவரது தம்பி மணிகண்டன் மீது புகார் கொடுத்தார். அதில், தனது முதல் மனைவி விபத்தில் இறந்த பின்னர் சத்யபிரியாவை திருமணம் செய்ததாகவும், திருமணத்திற்கு பின்னர் சத்யபிரியவும், அவரது சகோதரர் மணிகண்டனும் சேர்ந்து, தனது முதல் மனைவியின் மகளை கொடுமைப்படுத்தயதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் டெல்லி போலீசார், அவர்கள் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள நார்த் அவின்யூ காவல் நிலையத்தில் வரும் 24ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கான நோட்டீசை கொடுக்க டெல்லி நார்த் அவின்யூ எஸ்.ஐ விஜயபால் தலைமையில் 5 போலீசார் நேற்று மாலை மதுரை வந்தனர்.
மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து, இந்த தகவலை அவர்கள் தெரிவித்தனர். பின்னர் கீரைத்துறையில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததால், கதவில் போலீசார் நோட்டீசை ஒட்டி விட்டு சென்றனர். இதற்கிடையே சத்யபிரியா மற்றும் அவரது தம்பி மணிகண்டன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கீரைத்துறை போலீசாரின் உதவியுடன், அவர்கள் இருவரையும் கைது செய்ய, மதுரையில் முகாமிட்டு டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.