காவிரி பிரச்னையால் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள்: பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு
4/16/2018 3:51:06 PM
சென்னை: காவிரி பிரச்னையால் இரு மாநில விவசாயிகள் சண்டையிடக் கூடாது. இந்த பிரச்னையை வைத்து அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்றார் நடிகர் பிரகாஷ்ராஜ். தொடர்ந்து சமூக கருத்துகளை டிவிட்டர் மூலமும் பேட்டி வாயிலாகவும் தெரிவித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். கர்நாடக தேர்தலில் பாஜவுக்கு எதிராக அவர் பிரசாரம் செய்து வருகிறார். புற்றுநோயை போன்றது பாஜ என சமீபத்தில் அவர் கடுமையாக விமர்சித்தார். இதனால் அவரது காரை முற்றுகையிட்டு பாஜவினர் அவரை தாக்க முயன்றனர். இந்நிலையில் காவிரி நீர் பிரச்னை குறித்து அவர் அளித்த பேட்டி: காவிரி நீர் விவகாரத்தில் அரசியலை நீக்கினாலே எல்லாம் சரியாகிவிடும். காவிரி நீரை வைத்துதான் விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்.
இப்போது அதை வைத்துதான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள். இந்தியா ஒரு தேசம். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் போன்றவர்கள் நாம். எனவே எந்த நிலையிலும் இரு மாநில விவசாயிகளோ மக்களோ சண்டையிடக் கூடாது. இரு மாநிலத்தவர்களும் ஒரே நதி நீரை குடித்திருக்கிறோம். அதற்காக சண்டையிடுவது சரியல்ல. காவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் கர்ஜிப்பார்கள். அதை நம்பக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பை கூட கிள்ளிப்போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலத்தால்தான் இத்தனை ஆண்டுகளாக இப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.