காஷ்மீரில் நடந்த சம்பவம்போல் குஜராத்தில் 9 வயது சிறுமி பலாத்காரம்
4/15/2018 4:51:51 PM
சூரத்: குஜராத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், சூரத்தின் புறநகர் பகுதியில் உள்ள வயல்வெயில் சமீபத்தில் சிறுமியின் சடலம் கிடந்தது. சிறுமியின் உடலில் அதிகளவில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதில், சம்மந்தப்பட்ட நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாஜ எம்எல்ஏ, அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது குஜராத் மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடைபெற்றுவரும் இதுபோன்ற சம்பவங்கள் மத்தியில் ஆளும் பாஜ அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.