மே 3ல் சாத்தியமா!
4/10/2018 4:11:59 PM
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை முன்னரே அணுகியிருக்க வேண்டும். மே 3க்குள் விரிவான செயல்திட்டத்தை அளிக்க வேண்டும். மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு செயல் திட்ட வரைவில் மாற்றம் செய்வது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்’ காவிரி இறுதித்தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு, தமிழக, புதுவை, கேரள அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதல்ல. கடந்த பிப்ரவரி 16ம் தேதி காவிரி இறுதித்தீர்ப்பு அளிக்கப்பட்டபோது, விரிவான செயல் திட்டத்தை(ஸ்கீம்) செயல்படுத்த மார்ச் 29 இறுதிக்கெடுவாக இருந்தது. காவிரி மேலாண் வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழகத் தலைவர்கள் குற்றஞ்சாட்டிவந்தனர். அது உண்மை என்று மார்ச் 29 அன்று நிரூபணமானது.
இறுதிக்கெடு முடிந்தபிறகுதான், ஸ்கீம் என்றால் என்ன என்ற சந்தேகம், மத்திய அரசுக்கு வந்தது. இது திட்டமிட்ட காலதாமதம். இதை உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டி, ‘மத்திய அரசு ஏன் முன்பே அணுகவில்லை?’ என்று குட்டியிருக்கிறது. மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, கர்நாடகத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதே இப்போதைய இலக்கு. உச்சநீதிமன்றம் மே 3 வரை வழங்கியுள்ள கால அவகாசம், மத்திய அரசுக்கு ஒருவகையில் நல்லதுதான். ஆனால் மே 3க்குள் திட்டத்தை உருவாக்கும் என்பது நிச்சயமா? கர்நாடகத் தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. அது முடியும் வரை மத்திய அரசுக்குத் தொடர்ந்து சந்தேகங்கள் எழுந்துகொண்ேட இருக்கலாம்.
‘காவிரி நடுவர் மன்ற உத்தரவை இறுதித்தீர்ப்புடன் இணைத்துவிட்டோம். நீண்ட காலமாக உள்ள காவிரிப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அரும்பாடுபட்டுத் தீர்ப்பளித்தோம். உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க முடியாது. எனவேதான், சட்டப்படி விரிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், மத்திய அரசு தேவையான எதையும் இதுவரை செய்யவில்லை’ என்று தலைமை நீதிபதி ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இறுதிக்கெடுவுக்குள் உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாததால், தமிழக அரசு தொடர்ந்த மத்திய அரசு மீதான அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது. ‘உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு காலதாமதத்தை ஏற்படுத்தாது’ என்று காவிரி வழக்கு விசாரணையில் பங்கேற்க வந்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறியிருக்கிறார். ஆனால், ‘வான் பொய்ப்பினும் தான்பொய்யா காவிரி’ என்ற வாக்கு பொய்க்காமல் நிஜமாகும் நம்பிக்கை மெல்ல மெல்ல விலகுகிறது.