நிமிருமா முதுகெலும்பு?
2/13/2018 3:41:03 PM
உற்பத்திச்செலவை விட 50 சதவீதம் கூடுதலாக, பயிர்களின் ஆதார விலை இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தாலும், விவசாயிகளுக்கு அது கனவாகவே இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, உற்பத்திச்செலவில் இருந்து ஒன்றரை மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, இந்தப் பரிந்துரை முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால், இதன் செயலாக்கம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. நாடு முழுவதும் உள்ள 585 பெரிய விவசாயச் சந்தைகள் தேசிய மின்னணு வேளாண் சந்தையுடன் வரும் மார்ச்சுக்குள் இணைப்பது சாத்தியமானால், வேளாண் பொருட்களை அரசு நிர்ணயித்த விலைக்கோ, அதற்கு மேலாகவோ நேரடியாக விற்க வாய்ப்பு உருவாகும்.
அரசு விவசாய அங்காடிகளின் உள்கட்டமைப்பு பரிதாபமானது. விவசாயிகளில் 86 சதவீதத்தினர் சிறு, குறு விவசாயிகள். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி சந்தை உள்கட்டமைப்பு நிதியைப் பயன்படுத்தி, சந்தைகளைச் செம்மைப்படுத்த துரித நடவடிக்கை வேண்டும். ஆதார விலையை ஒன்றரை மடங்கு உயர்த்துவதால் மட்டும் விவசாயிகளின் வருவாயை உயர்த்திவிட முடியுமா என்றால் இயலாது என்பதே யதார்த்தம். நெல், கோதுமை தவிர, பிற விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. மொத்த உற்பத்தியில் 17 சதவீதம் நெல்லும், 19 சதவீதம் கோதுமையும் மட்டுமே அரசுத்துறை நிறுவனங்களால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது என்பது 2013ல் நடந்த ஆய்வில் அம்பலமானது.
கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், அரசு அறிவித்த ஆதார விலைக்கும் கீழாக, வணிகர்களிடம் விற்கும் சூழல் நேர்கிறது.
தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை வீழ்ச்சியால், உற்பத்திச்செலவைக் கூட மீட்க முடிவதில்லை. சில நேரங்களில் காய்கறிகள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விடப்படுகின்றன. அல்லது பறித்தவை சாலைகளில் கொட்டப்படும் அவலத்தையும் காண்கிறோம். எளிதில் அழுகக்கூடிய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் பட்ஜெட்டில் ‘ஆபரேஷன் கிரீன்’ என்ற பெயரில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இடுபொருட்கள் விலை உயர்வு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள், விளைபொருள் கொள்முதலில் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம், பருவ நிலை மாற்றங்கள்(கடும் வறட்சி, அளவுக்கதிகமான மழை), அரசு முகமைகளின் ஒத்துழைப்பின்மை, பாசன நீர் மேலாண்மைச் சிக்கல்கள், நவீன வேளாண் முறைகள் குறித்த தெளிவின்மை உள்ளிட்டவை விவசாயிகளுக்கான பெரும் இடர்ப்பாடுகள். இவற்றையும் மீறி தங்கள் முதுகெலும்பு தாழ்ந்தாலும் நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்துவதற்காக உழவர்கள் படும் இன்னல்கள் அளவு கடந்தவை. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தும் முயற்சி நனவானால் நலமே!