பயிர் கருகியதால் அதிர்ச்சி - வயலில் விவசாயி தற்கொலை
1/12/2017 2:43:19 PM
லால்குடி - திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(55). விவசாயி. இவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்பமே விவசாயம், விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பழனிச்சாமி தனது 1.45 ஏக்கர் வயலில் கடன் வாங்கி சோளம் சாகுபடி செய்திருந்தார். சம்பா நடவுக்காக நாற்றங்காலும் அமைத்திருந்தார். இந்நிலையில் தண்ணீர் இல்லாமல் சோளம் மற்றும் நாற்றங்கால் கருகியதால் மனமுடைந்த விவசாயி பழனிச்சாமி நேற்றுமாலை வயலில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த லால்குடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை, சாவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பழனிச்சாமி நேற்று வயலிலே தற்கொலை செய்து கொண்டார். இதனால் விவசாயிகள் உயிரிழப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்தது.
இறந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி பழனிச்சாமியின் உடல் வைக்கப்பட்டுள்ள லால்குடி அரசு ஆஸ்பத்திரி முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம் நடத்துகின்றனர்.