திருவள்ளூர் மாவட்டத்தில் கழிப்பறை மானியத்துக்கு அலையும் மக்கள்
12/27/2016 2:17:09 PM
திருவள்ளூர் - திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்க ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தூய்மை பாரத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிப்பறை கட்டுவதற்கு மானியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் ஆர்வமுடன் கழிப்பறைகளை கட்டி வருகின்றனர்.
சிலர் கடன் வாங்கி கழிப்பறைகளை கட்ட 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். கழிப்பறையை முழுமையாக கட்டியபின் புகைப்படம் எடுத்து கொடுத்தால் மானியத்தை கொடுக்க வேண்டும். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓராண்டாக தனிநபர் இல்ல கழிப்பறைகளுக்கு மானியம் வழங்கவில்லை. இதனால் கழிப்பறை கட்டியவர்கள் மானியத்திற்காக ஒன்றிய, கலெக்டர் அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். இதன்காரணமாக மற்றவர்களும் கழிப்பறை கட்டுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.