Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
26
Nov
அக்னி மலையாக நின்ற அண்ணாமலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலம்.. நினைத்தாலே முக்தி தரும் சிறப்புடையது திருவண்ணாமலை. சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம். அடி, முடி காண முடியாத மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஆதி அந்தம் இல்லாத ஜோதிப் பிழம்பாக பிரமாண்ட அக்னி மலையாக சிவபெருமான் ஓங்கி நின்று காட்சியளித்த திருத்தலம் இது. சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்த அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும் இந்த தலமே.  சிவபெருமான் அடி முடி காண முடியாதவன் என்று உணர்ந்த பிரம்மா மற்றும் விஷ்ணுவின் விருப்பத்தின்படி ஜோதி வடிவிலேயே சிவபெருமான் மலையாக விளங்கி நின்றார்.

அத்துடன் மலைக்கு கீழ்திசையில் அண்ணாமலையாராக லிங்கவடிவிலும் எழுந்தருளினார். சிவனின் இத்திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று மலைஉச்சியில் ஜோதி தரிசனம் தந்தருளவேண்டும் என இருவரும் வேண்டினர். அந்த திருநாள்தான் கார்த்திகை தீபத்திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. கிருதா யுகத்தில் அக்னி மலையாக, திரேதா யுகத்தில் ரத்தின மலையாக, துவாபர யுகத்தில் தாமிர மலையாக காட்சியளித்த சிவபெருமான் இந்த கலியுகத்தில் கல்மலையாக, வானுயர்ந்து நிற்கும் அண்ணாமலையாக காட்சி தருகிறார். அண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் சிவபெருமான் ஜோதி வடிவாய் காட்சியளிப்பதை தரிசித்தால் பிறவிப்பயன் பெறுவதாக ஐதீகம்.

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

ஊர் முழுக்க கோயில்கள்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் எண்ணற்ற கோயில்கள், ஆசிரமங்கள் உள்ளன. பழமை வாய்ந்த திருநேர் அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் அக்னி குளத்தையொட்டி உள்ள அக்னிலிங்கம், எமலிங்கம், சோணதீர்த்தம் அருகே உள்ள நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், சுயம்புவாக தோன்றிய குபேரலிங்கம், கிரிவல பாதையின் கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கம், கிரிவல பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் ஆகியவை விசேஷமானவை. அண்ணாமலையை சுற்றி சுமார் 300 குளங்கள் உள்ளன. சிவனே மலையாக காட்சிதரும் அண்ணாமலையின் மீது எவ்வித உருவ வழிபாடும், சன்னதியும் இல்லை.

ஆனால் மலையடிவாரங்களிலும், மலை உச்சிக்கு செல்லும் வழியிலும் மகான்கள் தங்கியிருந்த இடங்கள் தற்போது கோயில்களாக உருமாறி இருக்கின்றன. குகை நமச்சிவாயர் கோயில், பச்சையம்மன் கோயில், பவளக்குன்று கோயில், பாண்டவர் கோயில், கன்னிமார்கோயில், வேடியப்பன் கோயில், தண்டபாணி கோயில், பாவம் தீர்த்தகோயில், பெரியாண்டவர் கோயில், கண்ணப்பர்கோயில், அரவான்கோயில், அம்மன்கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மகான்கள் தவமிருந்த வண்ணாத்தி குகை, பவளக்குன்று குகை, அருட்பால் குகை, மாமரத்துகுகை, விருப்பாட்சிகுகை ஆகியவை வழிபாட்டுக்குரியவை.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்க ளில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கி சாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

கார்த்திகை ஜோதி மகத்துவம்

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

விளக்கு ஏற்றுவது யாகத்துக்கு சமம்

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வந்தால், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

தி.மலை நயினார்

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement